டில்லி
கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 8 வரை நடந்த அகில இந்திய பள்ளி மாணவர் விளையாட்டுப் போட்டிகளில் 12 பேர் ஊக்க மருந்து உபயோகித்ததாக புகார் எழுந்துள்ளது.
அகில இந்திய பள்ளி மாணவர் விளையாட்டுப் போட்டிகள் தலைநகர் டில்லியில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போட்டியில் நாடெங்கும் உள்ள பள்ளிகளில் இருந்து விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துக் கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளின் போது சில மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவைகளை உபயோகித்துள்ளனரா என போட்டியில் கலந்துக் கொண்டவர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேர் தடை செய்யப்பட்ட மருந்துக்களை உபயோகித்துள்ளதாக புகார் பதியப்பட்டுள்ளது.
இந்த 12 பேரில் நான்கு பேர் மல்யுத்த வீரர்கள், மூன்று குத்துச் சண்டை வீரர்கள், இருவர் உடற்பயிற்சிப் பிரிவினர், மற்றும் வாலிபால், ஜூடோ மற்றும் தடகளம் ஆகிய பிரிவில் ஒவ்வொரு வீரர்கள் உள்ளனர். இந்த 12 பேரில் ஐந்து பேர் தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களில் மூவர் மல்யுத்தப் பிரிவிலும் ஒருவர் உடற்பயிற்சியிலும், ஒருவர் வாலிபால் பிரிவிலும் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர்.
இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த மாத ஆரம்பத்தில் புகாரில் சிக்கிய விளையாட்டு வீரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.