புனே: புனேவில் நாளை முதல் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று அதிகம் காணப்படும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் தொற்று அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தடை உத்தரவுகளை பிறப்பித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந் நிலையில் புனேவில் நாளை முதல் 12 மணிநேர இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பார்கள், விடுதிகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்படுகிறது.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. இறுதிச் சடங்குகள். திருமணத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 7 நாள்களுக்கு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், அதனை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.