திருவனந்தபுரம்,
பெண்கள் மாதவிடாய் காலங்களில் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாணவிகள் மத்திய நிதி அமைச்ர் அருண் ஜேட்லிக்கு சானிடரி நாப்கின்களை பார்சல் அனுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருகிறது. ஏழைகள் விரும்பி உண்ணும் கடலை மிட்டாய்க்கு வரி, அதுபோல் குண்டூசி முதல் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொட்டு வரை அனைத்திற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பில் மாதவிடாய் மற்றும் குழந்தைப் பேறு காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களின் மீதான வரி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கொல்கத்தா பாலியல் தொழிலாளிகள் நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது, பெண்கள் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், கேரளாவில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சானிட்டரி நாப்கின்களில் ‘ப்ளீடு வித்அவுட் டேக்ஸ்’ என்று எழுதி அவற்றை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மாணவிகள் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.