சென்னை
முதல் முறையாகத் தமிழகத்தில் 12 பேருக்கு பிஏ வகை ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது.
நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான ஆய்வு நடந்தது. இந்த ஆய்வை நடத்தத் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் நேற்று இங்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 139 மாதிரிகள் வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வில் 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு பிஏ4 வகை ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்முறையாக தமிழகத்தில் பிஏ வகை ஒமிக்ரான் உறுதியாகி உள்ளது. இந்த வகை வைரசால் பாதிக்கப்பட்ட 12 பேரும் குணமடைந்து விட்டனர். கொரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையிலும் 6 பேர் ஐசியூவிலு,ம் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.