காட்சி மொழியின் காதலன்.. பாலு மகேந்திரா..
சிறப்பு கட்டுரை:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
இலங்கையில் பிறந்தவருக்கு ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் மற்றும் இந்தியாவின் சர்வதேச திரை அடையாளமான இயக்குனர் சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு.
இருந்தாலும் ஃபோட்டோகிராபியே முதல் காதல் என்பதால், திரைப் பயணம் என்பது கேமராவின் வழியாகத்தான் துவங்கியது..
எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில் பேசவைத்தது சட்டக்காரி என்ற படம்..
நடிகை லட்சுமிக்கு செம பிரேக் தந்த படம்.. அவரின் இரண்டாவது கணவர் மோகன் சர்மா உடன் நடித்த படம். (சலங்கை ஒலியில் ஜெயப்பிரதாவின் கணவராக வருபவர்தான் மோகன் சர்மா).
சட்டக்காரி படத்தின் இயக்குனர் தென்னிந்திய திரைப்பட உலகத்தின் ஜாம்பவான் கே. எஸ்.சேதுமாதவன். 1962- ல் கமலை மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக, அதுவும் இரட்டை வேடத்தில் அறிமுகப்படுத்திய ஜாம்பவான்.
தமிழில் எம்ஜிஆரை வைத்து’ நாளை நமதே’, கமலை வைத்து ‘நம்மவர்’ போன்ற படங்களை பின்னாளில் இயக்கியவர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவானின் சட்டக்காரி படத்தில் பணியாற்றிய பாலுமகேந்திராவுக்கு, அதற்குப் பிறகு ஏறுமுகம்தான்..
சட்டக்காரி படம் பின்னர் இந்தியில் ஜூலியாக எடுக்கப்பட்டு அதிலும் குட்டை பாவாடையோடு லட்சுமி கிளாமராக கலக்கியதில் அகில இந்திய அளவில் தாறுமாறாக ஓடியது என்பது தனிக்கதை.. மலையாள சட்டக்காரியும் இந்தி ஜூலியும் சேர்ந்து தமிழில் ஓ மானே மானே என்று மோகன் – ஊர்வசி ஜோடி ரீமேக்கில் வெளிவந்து பிளாப் என்பது சோகமான வரலாறு.
ஓ மானே மானே படத்தில் மோகனுக்காக, கமல் ஒரு பாடலையும் பாடியிருந்தார் என்பது சினிமா சுவாரஸ்யங்களில் ஒன்று.
வேலை கமலின் படத்தில் தான் மோகன் அறிமுகமானார் என்பதாலோ என்னவோ..n அந்த ஃப்ளாஷ் பேக் உடனேயே மீண்டும் விஷயத்திற்குள் போவோம்.
போட்டோகிராபியுடன் தொடர்ந்து ஏறு முகத்தைக் கண்ட பாலுமகேந்திராவுக்கு டைரக்சன் செய்யும் ஆசையும் வந்துவிட்டது. 1977-ல் டைரக்டராய் கச்சிதமாய் கன்னடத்தில் செதுக்கியபடம், கோகிலா.
கமல் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில்தான் மைக் புகழ் மற்றும் வெள்ளிவிழா நாயகன் என்று இன்றும் பெருமையோடு பேசப்படும் நடிகர் மோகன் அறிமுகம். அந்த படம்,செம ஹிட்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழாவை நெருங்கிய நேரடி முதல் கன்னட படமும் இதுதான். அப்படியொரு காவியத்தை அளித்த பாலுமகேந்திராவுக்கு, அடுத்து திருப்புமுனையாக அமைந்தது இயக்குனர் மகேந்திரனுடன் கைகோர்த்த அந்த அற்புதமான தருணம்.
டைரக்டர் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா, கதாநாயகன். ரஜினிகாந்த், இசை இளையராஜா.. நால்வரும் இணைந்த முள்ளும் மலரும் (1978) படம் துவம்சம் செய்தது.. வசனங்களைக் காட்டிலும் காட்சி ஆட்சி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் மகேந்திரனின் எண்ணங்களையும் விருப்பங்களையும் வாரி வாரி வழங்கியது பாலுமகேந்திராவின் அற்புதமான கேமரா.
அதிலும் குறிப்பாக, “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” மற்றும் “அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்” ஆகிய இரண்டு பாடல்களுக்கும் பாலுமகேந்திரா கேமரா காட்டிய அழகியல், தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்ல வேண்டும்
இயக்குநர் என்ற வகையில் ஆரம்பத்தில் ஹாலிவுட் படங்களை தழுவி, அழியாத கோலங்கள், மூடுபனி என தந்தாலும் பின்னாளில் மூன்றாபிறை மூலம் அமைதியான கதகளி ஆடியவர் பாலு மகேந்திரா .
மூன்றாம் பிறை படத்தில் கமலுக்கு தேசிய விருது.. இவருக்கு சிறந்த போட்டோகிராபர் விருது.. சென்னை சத்யம் காம்ப்ளக்ஸ்சில் ஒரு வருடத்துக்கு மேல் ஓடி வசூலை அள்ளிக்குவித்த படம் மூன்றாம் பிறை என்பதெல்லாம் சாதனை ரகம். மூன்றாம் பிறையில் சில்க் சுமிதா பாத்திரத்தை பெரும்பாலானோர் செக்ஸியாக மட்டுமே பார்த்தார்கள். நுட்பமாக ஆராய்ந்தால்தான் அந்த பாத்திரத்தை கச்சிதமாக பாலுமகேந்திரா படைத்திருப்பது புரியவரும். சில்க் இல்லை என்றால் அந்த படத்தில் கமலின் பாத்திரம் டம்மியாக மாறிப்போயிருக்கும்.
ஆஜானுபாகுவான இளைஞர்.. அவரைப் படுக்கையில் வீழ்த்த துடிக்கும் செக்ஸியான இளம்பெண். பலமுறை முயன்றும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு அவரிடம் மாட்டாமல் தப்பிக்கும் இளைஞன்.. இன்னொரு பக்கம், அதே இளைஞன் யார் என்றே தெரியாத ஒரு மனநலம் குன்றிய அழகிய இளம் பெண்ணை குழந்தை போல் வைத்து பராமரிப்பான்.
ஸ்ரீதேவியிடம் குழந்தை தனத்தை காட்டும் கமலிடம், அவருக்குள் இருக்கும் ஆண்மையையும் கம்பீரத்தையும் பொன் மேனி உருகுதே பாடல் மூலம் கடத்தி வந்து ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவது சில்க் ஸ்மிதாதான்.
இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு இரு விதமாகவும் படமாக்க தெரியும் என்பதை பின்னாளில் அவருடைய படங்கள் பறைசாற்றின. மூடுபனி, உன் கண்ணில் நீர் வழிந்தால், வீடு, ரெட்டை வால்குருவி, சந்தியா ராகம், மறுபடியும் என ஒரு புறமும், இன்னொருபுறம் நீங்கள் கேட்டவை, சதிலீலாவதி போன்ற கமர்சியல் மசாலாக்களையும் தந்தார் பாலு மகேந்திரா.
நம்மைப் பொருத்தவரை அவருடைய படங்களில் மிகவும் பிடித்தது என்றால் அது, அழியாத கோலங்கள் தான்.. பாலுமகேந்திரா தமிழில் முதன முதலா டைரக்ட் பண்ண அந்தப்படம் வேர்ல்ட் லெவல் கிளாசிக்.. மீசை அரும்பும் விடலைப்பருவத்தில், மனதில் அலைபாயும் அதீத பாலியல் ஆர்வத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் அந்த மனுஷன்.. மூன்று விடலைகளின் சேட்டைகளையும், அவற்றிற்கு அவ்வப்போது அணை கட்டும் பள்ளி ஆசிரியையின் போக்குகளையும் அந்த அளவுக்கு நேர்த்தியாக செதுக்கியிருப்பார்.
நீரோடை பாயும் கிராமம், விதவிதமான மக்கள், தபால் ஊழியர், விலைமாது என்று பாத்திரங்களும் இடங்களையும் விவரிக்க பக்கம் பக்கமாகத்தான் எழுதவேண்டும்.. படத்திற்கு எப்பூட்டும் வகையில் பங்கை அளித்தவர் கங்கை அமரன். ஆம் அழியாத கோலங்களுக்காக கங்கமறு எழுதிய பாடல்கள் அத்தனையும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்..
பூவண்ணம் போல நெஞ்சும் பாடல் .. பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரனின் இன்பம் பிடியிலிருந்து நமது காதுகள் வெளியே வருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல அதேபோல எஸ்பிபி பாடிய , “நான் எண்ணும் பொழுது” பாடல்.. இந்த கிளாசிக் பாடல் ராகம் பிறந்தது முதலில் வங்காளத்தில். அதை நிகழ்த்தியவர் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி.
அந்த வங்காளத்தில் போட்ட இசையை இந்தி ஆனந்த் படத்தில் கொண்டுவந்த பின்னர் நிறைவாக அழியாக கோலங்களில் சேதாரமே இல்லாமல் சேர்த்திருப்பார் இசை ஜாம்பவான் சலீல் சௌத்ரி..
சலீல் என்றாலே, 1958 ல் வெளியான திலீப் குமார்- வைஜெயந்தி மாலா நடித்த மதுமதி பாடத்தின் பாடல்கள் பற்றி எழுத, கை துடிக்கின்றன. அது மட்டுமா தேவ் ஆனந்த் – மாலா சின்ஹா நடித்த மாயா படத்தில் சலீல் மீட்டிய அந்த எவர்கிரீன் Tas veer tere.. நாம மட்டும் சக்ரவர்த்தியா இருந்தா அந்த ஒரு பாட்டுக்கே நாலஞ்சு கிராமங்களை எழுதி கொடுத்திருப்போம்..
சரி போகட்டும் அழியாத கோலங்கள் படத்தில் “நான் எண்ணும் பொழுது” பாடலுக்கு வருவோம் பாலு மகேந்திராவை இந்த பாடல் எந்த அளவுக்கு மனதுக்குள் போட்டு தாக்கிக்கொண்டே இருந்திருக்க வேண்டும்? நமக்குந்தான்..
இயக்குனர் என்று வரும்போது கதாநாயகிகள் தேர்வு விஷயத்தில் பெரும்பாலான இயக்குனர்களுக்கு சிவப்பான நாயகிகள் தான் முதலிடத்தில் தெரிவார்கள். ஆனால் பாலுமகேந்திராவுக்கோ மாநிற நாயகிகளே முன்னுரிமை. ஷோபா, அர்ச்சனா..
பாலு மகேந்திரா எடுத்துக் கொண்டால் அவருக்கான வியப்பான பக்கங்கள் ஏராளம்.. யாரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றாமல் தானாகவே இயக்குனர் சீட்டில் அமர்ந்து சாதனைகள் படைத்து தற்போது பெரும் புகழோடு திகழும் இயக்குனர் மணிரத்தினத்தின் முதல் கேமரா மேனே பாலுமகேந்திரா தான்.
தனிப்பட்ட வாழ்க்கையில் விதவிதமான சர்ச்சைகள் என்பது பாலுமகேந்திராவின் இன்னொருபக்கம்..
காட்சிகள், அழகியல் பதிவு, வித்தியாசமான பாத்திர படைப்பு என தனிப்பாதையை தீட்டியதோடு, தமிழ்திரையுலகில் டைரக்டர் பாலா உள்பட ஏராளமான சிஷ்யப் பிள்ளைகளை உருவாக்கி தந்துவிட்டுப்போன பாலுமகேந்திராவின் 11- ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று