சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.  11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. செய்முறை தேர்வுக்கான மையங்கள் மாணவர்கள் படிக்கும்  அந்தந்த பள்ளியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வேறு பள்ளிகளில் இருந்து, தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆசிரியர்களுக்கு செய்முறை தேர்வுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்முறை தேர்வுக்கான நேரம் 3மணியில் இருந்து 2மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர்.