சென்னை: நெல்லையில் பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை மர்ம நபர் கத்தியால் குத்திய நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பெண் எஸ்பியுடம்  தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர்  மார்க்ரெட் கிரேசி  தெரசா. இவர் விழா ஒன்றுக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தபோது  மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கினார். இதில், அவரின் கழுத்து, கன்னம், மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அருகே உள்ள சக காவலர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பெண் எஸ்பியை கத்தியால் தாக்கிய ஆறுமுகம் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், ஏற்கனவே பெண் எஸ்பிக்கும் அவருக்கும் தகராறு இருந்ததாகவும்,  முன்விரோதம் காரணமாக  ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் ஆளும் அரசு மீது புழுதிவாரி இறைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தாக்குதலுக்கு ஆளான காவலரிடம் நலம் விசாரித்ததாக டிவிட் பதிவிட்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், “திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்” என்று விளக்கமளித்துள்ளார்.