புதுடெல்லி:
மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்ற 117 மக்களவை தொகுதிகளில், வரும் தேர்தல் அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
சர்வதேச முதலீட்டு வங்கியான கிரெடிட் ஸ்யூஸி தரப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் விவரம் வருமாறு:
மிகக் குறைந்த வாக்குகள் பெற்று 117 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதில் 73 தொகுதிகளில் 10 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று பாஜக வெற்றி பெற்றது.
மீதமுள்ள 44 தொகுதிகளில் உத்திரப்பிரதேசத்தில் 34 தொகுதிகளில் 10 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. தற்போது உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வலுவாகி விட்டதால், அங்கும் பாஜகவுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
மீதமுள்ள பாஜக வெற்றி பெற்ற 10 தொகுதிகள் கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் வருகிறது. இங்கு மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது பாஜகவுக்கு பெரும் சவாலாகிவிட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 543 மக்களவைத் தொகுதிகளில், 300 தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி கிட்டியுள்ளது.
பாஜக வெற்றி பெற்ற 73 தொகுதிகளில், கூட்டணி பலமும், 10 கோடி புதிய வாக்காளர்களும் இருப்பதால் பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்துவிட்டது.
உத்திரப்பிரதேசத்தில் பிரிந்து கிடந்த வாக்குகளை சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் சிதறாமல் பெறக் கூடிய சூழலில், பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைப் பொருத்தவரை, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை அள்ளும்.
கடந்த 30 ஆண்டுகளாகவே வெற்றி பெறுவோரின் வாக்கு சதவீதம் 45-48 என்ற அளவிலேயே இருந்துள்ளது. இந்த வெற்றி இடைவெளி கடந்த 2014 தேர்தலில் 15 சதவீதமாக குறைந்துள்ளது.
மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜக நிலைமை படுமோசமாகவே உள்ளது.
இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.