மதுரை: பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. திமுக, இன்றைய தினத்தை முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழா விருதுநகரில் இன்று நடைபெறுகிறது. அத்துடன் இன்று காலை முதலமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12.40 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மேயர் இந்திராணி, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். விமானநிலையத்தில் இருந்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்ற முதல்வரை வழிநெடுக பொதுமக்கள், திமுகவினர் வரவேற்றனர்.
விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். முதல்வர் வருகையையொட்டி மதுரையில் அவர் செல்லும் சாலைகள், நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை அண்ணா பிறந்தநாளையட்டி, மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று கட்டுமானப் பணியைத் தொடங்கி வைக்கிறார். மதியம் ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மாலை 4 மணியளவில் பட்டம்புதூரில் நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.