114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் நேற்று தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் மரணமடைந்தார்.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பியாஸ் கிராமத்தைச் சேர்ந்தவரான ஃபௌஜா சிங் ‘டர்பனெட் டொர்னாடோ’ (‘Turbaned Tornado) என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
1911ம் ஆண்டு ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த சிங் 2000மாவது ஆண்டில் தனது 89வது வயதில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட துவங்கினார்.

தனது மனைவி மகனை விபத்தில் இழந்த சோகத்தை மறக்க மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள துவங்கியதாகக் கூறப்படுகிறது.
2000மாவது ஆண்டில் லண்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் இவர் முதல் முதலாக கலந்து கொண்ட போதும் உலகின் மிக அதிக வயதில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டவர் என்பதை நிரூபித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இவரிடம் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து 18 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற இவர் 2011ம் ஆண்டு டொரோண்டோ, 2012ல் லண்டன் மற்றும் 2013ம் ஆண்டு ஹாங்காங் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் கடைசியாக பங்கேற்றார்.
கடைசியாக தனது 102 வயதிலும் மாராத்தானில் கலந்து கொண்டு ஓடிய இவர் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக கம்பு ஒன்றி நடந்து சென்று வந்த நிலையில் நேற்று பகல் 3:30 மணியளவில் அவரது வீட்டின் அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருவதாக பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தெரிய்வித்துள்ளனர்.