பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் தேவின் 550வது பிறந்த நாள் வழிபாட்டிற்காக சீக்கிய யாத்ரீகர்கள் வருகை வாகா எல்லை வழியாகத் தொடங்கிவிட்டதாக டான் செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாரா பஞ்சா சாஹிப்பில் சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவின் 550வது பிறந்த நாள் வரும் நவம்பர் 12ம் தேதி அன்று விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சீக்கியர்கள் மிகவும் மதிக்கும் ஆலயமான கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவில்தான் குருநானக் தேவ் தனது வாழ்நாளின் 18 ஆண்டுகளைக் கழித்தார். மேலும் அவரது இறுதி ஓய்வு இடமும் அதுவேயாகும். கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா முதலில் குருத்வாரா தர்பார் சாஹிப் என்று அழைக்கப்பட்டது. இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் இந்த ஆலயத்தைப் பார்வையிட பாகிஸ்தான் செல்ல வசதியாக இருக்கும் கர்தார்பூர் நடைபாதை, வரும் சனிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட உள்ளது.

இதற்கென குருநானக் பிறந்த நாளில் குருத்வாரா வழிபாட்டிற்காக சீக்கியர்கள் இந்தியாவிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இதில் பங்கேற்க இங்கிலாந்தில் இருந்து 178 பேர் அடங்கிய உறுப்பினர் குழு பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. அட்டாக் மாவட்டத்தின் ஹசன் அப்தாலில் உள்ள குருத்வாரா வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யாத்ரீகர்கள் மாதா டாக்கி, அஷ்னன் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளைச் செய்து பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரிய (ஈடிபிபி) துணைச் செயலாளர் இம்ரான் கோண்டல் கூறியதாவது: ”இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய யாத்ரீகர்கள் குருநானக் வழிபாட்டிற்காக வாகா வழியாக எல்லையைக் கடந்து வரத் தொடங்கியுள்ளனர். இதுவரை 1,100 இந்திய சீக்கியர்கள் வந்துள்ளனர். அக்டோபர் 31ம் தேதி லூதியானா மற்றும் அமிர்தசரஸ் வழியாக வந்த சீக்கிய யாத்ரீகர்கள், குருத்வாரா ஜனாமஸ்தான், நங்கனா சாஹிப், குருத்வாரா சச்சா சோடா ஃபாரூகாபாத் மற்றும் பிற கோயில்களுக்குச் சென்றனர். அவர்களின் யாத்திரை கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் நிறைவடையும். அங்கு செவ்வாய்க்கிழமை தங்க பல்லக்கு ‘பால்கி சாஹிப்’ நிறுவப்படும்.

நகர் கிர்டானுக்கு சீக்கியர்கள் செல்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 1,300 விசாக்கள் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மதக் கோயில்களுக்கான வருகைகள் குறித்த நெறிமுறையின் கீழ் வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ் இந்தியாவில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறையாவது மத விழாக்களுக்காக பாகிஸ்தானுக்கு வருகை தருகின்றனர்.

அப்படி வருபவர்கள் மத விழாக்களுக்கு வருகிறார்களே தவிர, அவர்களிடம் சரியான விசாக்கள் இருந்த போதிலும் ஏன் பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு வர மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.
பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்த் குழு மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்தக் குழு, இந்திய மற்றும் உள்ளூர் சீக்கிய யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.