கோவை

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.,

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தன.  ஆனால் அப்போதைய ஆட்சியில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.   இதையொட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.   அவ்வகையில் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் நடந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சோதனைக்கு பிறகு எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.2 கோடிக்கு வைப்பு தொகை ஆவணங்கள், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், மற்றும் உறவினர்கள், பினாமிகள் நிறுவனங்களில் இன்று காலை ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று (15.3.2022) முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு தொடர்பான  59 இடங்களில் (கோயம்புத்தூர்-42, திருப்பூர் -2, சேலம்-4, நாமக்கல் – 1, கிருஷ்ணகிரி -1, திருப்பத்தூர்-1, சென்னை – 7 மற்றும் கேரள மாநிலம் ஆனைகட்டி-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால்  சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த  சோதனையில் 11.153 கிலோ கிராம் தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. மேலும் சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.