டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில், 27 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. கேரள மாநிலம் சாலக்கரா சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 11மணி நிலவரப்படி 20 சதவிகித வாக்குகளே பதிவாகி உள்ளது.

ஜார்கண்ட்டில் 43 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி  29%வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 11மணி நிலவரப்படி 25 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஜார்கண்ட்டில்,  2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20 என்று 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், அதன்பிறகு நவம்பர் 23ம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியது.

ஜார்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 30 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது

பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 17 தொகுதிகள் பொது தொகுதியாகும். 6 தொகுதிகள் எஸ்சி தொகுதியாகும். 20 தொகுதிகள் பழங்குடியினருக்கான தொகுதியாகும்.

இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டு நடமாட்டம் உள்ள இடங்களில் மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு என்பது நிறைவடைய உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 13.03 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் மொத்தம் 2.6 கோடி வேட்பாளர்கள் உள்ளனர்.

அதுபோல வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காலை 11மணி வரை 27 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில், மும்முனை போட்டி நிலவுகிறது. பிரியங்காவை  எதிர்த்து,   கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.