சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வருகிறது. வெற்றிகரமாக இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்க நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சாமானிய மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கச்சா எண்ணை விலை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முன்வருவது இல்லை. இதனால், நடுத்தர மக்கள், ஏழை மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இது மோடி அரசு மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ம் மத்தியஅரசு குறைத்து அறிவித்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலையில் அதிக அளவில் மாற்றம் இல்லாமல் தொர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலைமாற்றமின்றி விற்பனை இன்று 100வது நாளை எட்டி செஞ்சுரி போட்டுள்ளது. இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.