சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிரான தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்ததும் பல துறைகளை தனியார் மயமாக்கி வருவதுடன், பல துறைகளின் பணி நியமனங்களும் தனியார்களிடமே வழங்கி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், சென்னை உள்பட பல பகுதிகளில் தூய்மை பணிகளையும் தனியாரிடம் தாரை வார்த்து வருகிறது.

சென்னையில் ஏற்கனவே பல மண்டலங்கள் தூய்மை பணி தனியாரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில், சென்னை மாநகராட்சி 5 மற்றும் 6-வது மண்டலங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. இதை எதிர்த்து, அங்கு ஏற்கனவே பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், தூய்மைப் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் தங்களுக்கு பழைய பணி நிலையிலேயே நிரந்தர படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ரிப்பன் பில்டிங்கில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், ரிப்பன் பில்டிங் வெளியே சாலையில் அமர்ந்து போராடி வந்தனர். இந்த போராட்டத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீசார் இரவோடு இரவாக வலுக்கட்டாயகமாக தடுத்து நிறுத்தி, பலரை கைது செய்தனர். இது மக்களிடையே பேசும்பொருளாக மாறியது.
இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் அவ்வப்போது திமுக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு இடம் என பல பகுதிகளுக்கு சென்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போராட்டமானது உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி தலைமையில் தூய்மை பணியாளர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், போலீசாரின் பேச்சுவார்த்தை தொல்வி யடைந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மெரினா கடற்கரையில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், இன்று தூய்மை பணியாளர்களின் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ள நிலையில், அவர்கள் மாநகராட்சி அலுவலகம் அல்லது தலைமைச்செயலகத்தை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் பில்டிங் உள்பட பல முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், டெட் தேர்வுக்கு எதிராக ஆசிரியர்களின் போராட்டமும், மெரினா கடற்கரை அருகே சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் நடைபெறுவதால் சென்னை நகரம் பரபரப்பாக காணப்படகிறது.