திருப்பணித்துரா: குடிபோதையில் பேருந்துகளை ஓட்டிய 16 ஓட்டுநர்களுக்கு ‘இனி குடித்துவிட்டு பேருந்து ஓட்ட மாட்டேன்’ என 1000 தடவை இம்போசிஷன் எழுந்த வைத்து கேரள போலீசார் நூதன தண்டனை வழங்கினர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருவனந்தபுரம், கேரளா மாநிலம் கொச்சியில், விதிமீறலில் ஈடுபடும் தனியார் பேருந்துகளால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதை அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கி உள்ளனர். கொச்சி திருப்பணித்துரா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய 32 பேருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய, 16 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு அபராதம் விதித்த திருப்புணித்துறை போலீசார், ‘இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்’ என 1000 முறை இம்போசிஷன் எழுத வைத்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பிடிபட்ட பேருந்து ஓட்டுநர்கள், காவல்நிலையத்தில் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நின்று தங்கள் பள்ளி நாட்களைப் போலவே 1,000 முறை இம்போஷிசன் எழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓட்டுநர்கள் தரையில் உட்கார்ந்து, வாக்கியத்தை கீழே குலுக்கி, வரிக்கு வரி அதை மீண்டும் எழுதத் தொடங்கினர்.
இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றுள்ளது. அன்று அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை இன்ஸ்பெக்டர் வி.கோபகுமார் தலைமையிலான காவல் துறையினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பேருந்து டிரைவர்களை மடக்கினர். மொத்தம் 26 பேர் பிடிபட்ட நிலையில், 2 கேஎஸ்ஆர்டிசி டிரைவர்கள், 10 தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் நான்கு பள்ளி பஸ் டிரைவர்கள் அடங்குவர்.
இந்த 16 ஓட்டுநர்கள் ஓட்டிய பேருந்துகளில் பயணிகளை திருப்பூணித்துறை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு செல்வதற்கு போக்குவரத்து வசதியை போலீஸார் ஏற்பாடு செய்தனர். பள்ளி மாணவர்களையும் மப்டியில் இருந்த போலீசார் பாதுகாப்பாக அந்தந்த பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றனர்.
கேஎஸ்ஆர்டிசி ஓட்டுநர்களுக்கு எதிராக சிறப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் வி.கோபகுமார் தெரிவித்தார்.