சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பயிற்சி பெறும் 1000 பேருக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நான் முதல்வன் உள்பட  பல்வேறு திட்டகளை அறிவித்து வருகின்றன. இதனால், ஏராளமானோர் கல்வி கற்பத்தில் ஆர்வம் கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி கல்வி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, “கடந்த 3 மூன்று ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டம் மூலமாக, 3.06 இலட்சம் இளைஞர்களுக்கும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட, சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 2.02 இலட்சம் இளைஞர்களுக்கும், தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் என மொத்தம் 5.08 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் அடுத்தகட்ட முன்னெடுப்பாக, 6 மாத இலவச உண்டு, உறைவிட பயிற்சி திட்டமும் அறிமுகமாக உள்ளது. அதனடிப்படையில், சென்னை மண்டல மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே போட்டி தேர்வுக்காக 300 பேருக்கும், மதுரை மற்றும் கோவை மையத்தில் வங்கிப் பணி போட்டித் தேர்வுக்காக, தலா 350 பேருக்கும் உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது.

அதற்கான, டெண்டரில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 12ஆம் தேதி மாலை 3 மணிக்குள் https://tntenders.gov.in/nicgep/app இந்த இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், 2024 – 2025 ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரிக்கை அறிக்கை விடுத்துள்ளது.

இதனால், சரியான பயிற்சி நிறுவனம் மூலம், மேலும் பல மாணவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தங்களது குறிக்கோள்களை அடைய இயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.