சென்னை: தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தமிழகஅரசு வழங்கிய அனுமதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக, முதல்வர் விரைவில் நல்ல தகவலை தெரிவிப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகஅரசின் உத்தரவுக்கு மத்தியஅரசு மட்டுமின்றி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட, தமிழகஅரசு அமைத்துள்ள கொரோனா மருத்துவர்கள் குழுவினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பிலான புதியஇருதய சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் கேத் லேப் சிகிச்சை பிரிவினை துவக்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடக்கவுள்ளது. இதை ஆய்வு செய்ய ” மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வருகிறார். அப்போது, தடுப்பூசி செல்லுவதற்கான பூர்வாங்க பணிகளை ஆய்வு செய்கிறார் என்று கூறினார்.
அப்போது செய்தியளார்கள் திரையரங்கில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி கொடுத்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தெரிவித்தவர், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்பப்பெறுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும்.
அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் பொதுச்சுகாதார விதிகளில் எந்த சமரசமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.