பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது.
1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்த போராட்டம் வெடித்துள்ளது.
1972ம் ஆண்டு பங்களாதேஷ் நாடு உருவான நிலையில் விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80 சதவீதம் ஒதுக்கீடு செய்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான ஆட்சி உத்தரவிட்டது.
பின்னர், தகுதி அடிப்படையிலான பணி நியமனம் 1976ம் ஆண்டு 40 சதவீதமாகவும் அதன்பின் 1996ம் ஆண்டு 55 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.
ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்ற பின் 2018ம் ஆண்டு இந்த இடஒதுக்கீடு முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதோடு 30 சதவீதமாக இருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தார்.
இதனை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான இடஒதுக்கீடு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை 21ம் தேதி முதல் நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் இந்த போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் பலர் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டதால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸப் சேவைகள் முடங்கியது.
இந்த நிலையில் இணையதள சேவை கடந்த இரு நாட்களுக்கு முன் மீண்டும் வழங்கப்பட்ட நிலையில் நேற்று நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர் அமைப்பினர் கூறியதை அடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ள அந்நாட்டு அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷில் நடைபெற்று வரும் இந்த வன்முறை மற்றும் போராட்டத்தை அடுத்து அந்நாட்டிற்குச் செல்லும் இந்தியர்கள் தங்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.