சென்னை: நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் 100 நாள் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக  அமைச்சர் நேரு தெரிவித்தார்.

மாநகராட்சிகள், நகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று 2025-2026-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மார்ச் 15-ந் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இன்று நிதி அறிக்கை விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது,  காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, “காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஐந்து ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதில் 4 என்னுடைய தொகுதியை சார்ந்தவை…. அந்தப் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டது.. இவ்வாறு இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் கூறிய  அமைச்சர் கே.என்.நேரு, “புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு மண்டல அலுவலகம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நகராட்சிகளோடு, மாநகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.