சென்னை: மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்து மத்தியஅரசு புதிய பெயரை சூட்டியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய பாஜ அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் 125 நாள் வேலை திட்டமாக மாற்றியுள்ள மத்திய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. தற்போது அந்த திட்டத்தின் பெயரை மாற்றி, 100 நாட்களுக்கு பதிலாக 125 நாட்களாகவும், குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 240 ஆகவும் உயர்த்தியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்திட நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜ அரசு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. இதிலிருந்து மகாத்மா காந்தியின் மீது பாஜ வைத்திருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.
எனவே, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் எனது தலைமையில், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் முன்னிலையில் நாளை (18ம்தேதி) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]