index
 
நியூயார்க்: விண்வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களைவிட, இந்த கிரகங்கள் வேறுபட்டு இருக்கின்றன என்று நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கெப்ளர் என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது. நுண்ணிய தொலை நோக்கியைக் கொண்ட கெப்ளர், பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியபடி இருக்கிறது.
தற்போது கெப்ளர் அனுப்பியுள்ள தகவல்களின்படி நூறு புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பல கிரகங்களின் சூரியன்கள் மிக மிக பிரகாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. முன்பு கணித்ததை விட மிக சூடாகவும் இவை உள்ளன என்றும் நாசா தெரிவித்துள்ளது. 3 கிரகங்கள், பூமியை விட மிகப் பெரியதாக உள்ளன. ஒரு கிரகம், , ஹையடஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்திற்கு மத்தியில் உள்ளது. இந்த ஹையடஸ் நட்சத்திரக் கூட்டமானது, பூமிக்கு மிக நெருக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டம் ஆகும்.
இன்னொரு கிரகம், சிறிய நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இது போக மேலும் 243 கிரகங்கள் குறித்த தகவல்களையும் கெப்ளர் விண்கலம் அனுப்பியுள்ளது. அவை இன்னும் ஆய்வில் உள்ளதாக ஹார்வார்ட் ஸ்மித்சானியன் அஸ்ட்ரோ பிசிக்ஸ் மையத்தின் ஆண்ட்ரூ வான்டர்பர்க் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அறியப்பட்ட பல புதிய கிரகங்கள் குறித்த புதிய தகவல்களையும் கெப்ளர் அனுப்பியுள்ளதாம். தொடர்ந்து அவை பற்றி விரிவான ஆய்விலும் கெப்ளர் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் கெப்ளர் விண்கலம் கிரகங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அன்று முதல் 2013ம் ஆண்டு வரை அது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் குறித்த தகவல்களை அளித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நெப்ட்யூன் கிரகத்தை சுமார் 70 நாட்கள் கெப்ளர் ஆராய்ந்தது. மேலும் நமது பூமியைப் போல ஒரு புதிய கிரகம் இருப்பதையும் கெப்ளர்தான் நமக்குக் கண்டுபிடித்தது. அந்த பூமியானது நமது பூமியை விட பெரியது. அதேபோல அந்த கிரகம் சுற்றி வரும் சூரியன் நமது சூரியனை விட மிகப் பிரகாசமானது, அழியும் நிலையில் உள்ளது என்பதையும் கெப்ளர் கண்டுபிடித்து தெரிவித்தது.