100 கோடி மக்கள் ‘ஆதார்’ பதிவு!
ஆதார் அடையாள அட்டை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை கடந்த திங்கட்கிழமையுடன் 100 கோடியை கடந்துள்ளது.நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீத மக்கள் ஆதார் அட்டைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வகையில் ஆதார் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பயன்கள் மற்றும் மானியங்களை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு பயன்படுத்த தொடங்கியுள்ளது. ஆதார அட்டை மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதுதொடர்பாக பேசிய மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அரசின் கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சமையல் எரிவாயு ஆகியவைகளுக்கான மானியங்கள் போன்றவை ஆதார் எண் மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதன்மூலம் அரசின் ரூ.17,360 கோடி ரூபாய் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும்,ஆதார் சட்டப்படி தனிநபர் விவரம் குறித்த ரகசியங்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளபடி அனைத்து வகையான அம்சங்களும் தனிநபர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்குகளில் ஆதார் சட்டப்படி நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.