பீகார்: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், போட்டித்தேர்வுகளுக்கான வினாத்தாளை கசியவிடும் நபர்களுக்கு ரூ.1 கோடி அபராததுடன் 10 ஆண்டுகள் சிறை விதிக்கம் வகையிலான சட்ட திருத்தத்தை பீகார் மாநில அரசு நிறைவேற்றி உள்ளது.
நடப்பாண்டு நடைபெற்று முடிந்த நீட் இளநிலை தேர்வு முடிவு வெளியானதில் சர்ச்சையை ஏற்பட்டது. பல மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்ததும், சில மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மத்தியஅரசு சிபிஐ விசாரணை மற்றும் உயர்மட்ட குழு அமைத்தும் விசாரணை நடத்தியது. இதற்கிடையில் உச்சநீதிமன்றமும் விசாரணை நடத்தியது. விசாரணையைத் தொடர்ந்து, மத்தியஅரசு, என்டிஏ பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளதை ஒப்புக்கொண்டது. பீகாரில் உள்ள ஒரு மையத்தில்தான் வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வினாத்தாள் கசிவு போன்றவற்கு கடும் நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக கூறியது.
பீகாரின் பாட்னா மற்றும் ஜார்கண்டில் உள்ள ஹசாரிபாக் ஆகிய இரண்டு மையங்களில் தேர்வுக்கான தாள் கசிந்துள்ளது என்றும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் குறிப்பிட்டது.
இந்த நிலையில், பீகார் சட்டமன்றத்தில், போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீகார் சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹ 1 கோடி அபராதம் உள்ளிட்ட கடுமையான விதிகள் உள்ளன. மேலும், குற்றவாளிகளின் சொத்துகளை இணைப்பதற்கும், தேர்வு முறைகேடுகளுக்காக கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். சாத்தியமான குற்றத்தைப் பற்றி அறிந்திருந்தாலும், அதைப் புகாரளிக்காத தேர்வு சேவை வழங்குநர்களுக்கு ₹ 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
விசாரணையின் போது, சேவை வழங்குநரைச் சேர்ந்த மூத்த அதிகாரி யாரேனும் அனுமதித்திருப்பது அல்லது குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானால், அவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒருமனதாகநிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.