டில்லி:

மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் அமல்படுத்தி,  பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப்ரல்8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் ஜனவரி 9ந்தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

ஏற்கனவே மாநிலங்களில் இட ஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் அறிவித்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு 10% இடஒதுக்கீடு சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிய செயல் என்று உச்சநீதி மன்றதில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த புதிய சட்டதிருத்தத்தின் படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வீட்டில் குடியிருப்போர், நகராட்சி பகுதியில் 100 அடிக்கு அதிகமான இடத்திலும், நகராட்சி இல்லாத இடத்தில் 200 அடிக்கு அதிகமான இடத்திலும் குடியிருப்போர் இந்த சலுகையை பெற இயலாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்து வருவதாக கூறியவர், வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.