திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உலக புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு வருகை தருவார்கள்.
கடந்த 17 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 3.40 மணிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. தீப தரிசனத்தைக் காண நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.
இந்த வருடம் தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டு இதற்கான அனுமதிச்சீட்டு அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அனுமதிச்சீட்டைப் பெற பக்தர்கள் முண்டியத்துக் கொண்டு வருவதால் பக்தர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு சில பக்தர்கள் கல்லூரியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்த போது சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வரிசையில் நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளும் உடைக்கப்பட்டது. எனவே பக்தர்களை தடுக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர்.