மெக்சிகோ
ஒரு தேவாலய மேற்கூரை இடந்து விழுந்த விபத்தில் மெக்சிகோவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவின் சியுடாட் மடெரோ பகுதியில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திடீரென அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேற முயற்சித்தனர். இடிபாடுகள் மக்கள் கூட்டத்தின் நடுவே விழுந்ததால் பலர் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீட்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அங்கு விரைந்து சென்று ராட்சத கிரேன்களை கொண்டு இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 மாத குழந்தை உள்பட 60-க்கும் மேற்பட்டவர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது.
அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியாக இருந்தாலும் சம்பவம் நடந்தபோது அப்படி எதுவும் பதிவாகவில்லை. அதிகாரிகள் கட்டிடத்தில் காணப்பட்ட குறைபாடே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கும் என தெரிவித்தனர். தேவாலய மேற்கூரை இடிந்து கிடக்கும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.