பம்பா:
கார்த்திகை மாதம் மற்றும் மகரவிளக்கு, மண்டல பூஜைகளுக்கான சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்க உள்ள நிலையில், அய்யப்பனை தரிசிக்க வந்த 10பேர் கொண்ட பெண்கள் குழு பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
விசாரணையில், அந்த பெண்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், பெண்கள் அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகள் காலங்காலமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கட்டுப்பாடுகளை நீக்கி, அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல பெண்உரிமை போராளிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு அய்யப்ப பக்தர்கள் மற்றும் கேரள மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில், இன்று மண்டல பூஜை மற்றும் மகரவிளக்க பூஜைகாக கோவில் நடை திறக்கப்பட உள்ளது. முதல்நாளான இன்று அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையில், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வந்த 10 பெண்கள் வந்திருந்தனர். அவர்களை பம்பையில் தடுத்து நிறுத்திய கேரள போலீசார், சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்து கூறி திருப்பி அனுப்பினர். தரிசன செய்ய வந்த பெண்களின் வயது 50க்கும் கீழ் இருந்ததால் போலீசார் 10 பேரையும் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பணியில் கேரளா காவல்துறையினர் ஈடுப்பட துவங்கியுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக 24 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்கள், 112 துணை SP-க்கள், 264 ஆய்வாளர்கள், 1185 துணை ஆய்வாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கேரள காவல்துறை வெளியீடு தெரிவித்துள்ளது. மேலும், ஆலய வளாகத்தை சுற்றி 307 பெண்கள் உட்பட மொத்தம் 8402 சிவில் காவல்துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கோவிலுக்கு வந்துள்ளதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது.