அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்ட் பெறுவதற்கு 10.7 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து நடைமுறைப்படுத்த 134 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதனால் சுமார் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்ட் பெறுவதற்கு முன்பே மரணமடைய நேரிடும் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.

பணி அடிப்படையில் வழங்கப்படும் இந்த கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் குறித்த புள்ளிவிவரம் சமீபத்தில் வெளியானது.

கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடிவரவு ஆய்வுகளின் இணை இயக்குனரான டேவிட் ஜே. பியர் நடத்திய ஆய்வில் EB-2 மற்றும் EB-3 விண்ணப்பங்கள் அதிகளவில் தேங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் தேங்கிக்கிடப்பதாகவும் இதனால் 1.34 லட்சம் இந்திய சிறுவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு முன்பே வயதாகிவிடக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க கிரீன் கார்ட்துக்காக புதிதாக EB-2 மற்றும் EB-3 விண்ணப்பம் செய்யும் இந்தியர்கள் தங்கள் ஆயுளுக்கும் காத்திருக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.

ஆண்டிற்கு 1,40,000 கிரீன் கார்டுகள் மற்றும் ஒவ்வொரு நாட்டினரிடம் இருந்த வந்த விண்ணப்பத்தில் 7% மட்டுமே பரிசீலிக்கப்படும் என்ற கட்டுப்பாட்டை அமெரிக்க அரசு பின்பற்றி வருவதாலேயே இந்த நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்கள் குழந்தைகளுக்கு கிரீன் கார்ட் விண்ணப்பித்த பெற்றோர்கள் அவர்கள் 21 வயதை அடைவதற்கு முன் அவர்களுக்கு கிரீன் கார்ட் அல்லது அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைக்காவிட்டால் அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் அரசின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.