டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி நடைபெறுகிறது. சுமார் 100 கிமீ தூரம் நடைபெற உள்ள இந்த பேரணியில் 1லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி டெல்லியில் கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்தியஅரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள விவசாயிகள், குடியரசுத் தினமான இன்று மாபெரும் டிராக்டர்கள் பேரணி நடத்துகின்றனர். சுமார் 1 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணியில் கலந்துகொள்கின்றனர். அதில் பெண்களும் பங்கேற்று டிராக்டர்களை ஓட்டுவர் எனறு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகள் பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, தலைநகரில் குடியரசு தின விழா முடிந்த பிறகே பேரணி தொடங்க உள்ளது. இந்த டிராக்டர் பேரணி திக்ரி, சிங்கூர், மற்றும் காசிபாத் ஆகிய மூன்று பாதைகள் வழியாக சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு பத்து கிலோ மீட்டர் வேகத்தில் டிராக்டர்கள் அணிவகுக்க டெல்லி போலீசார் அனுமதித்துள்ளனர்.
தங்களது டிராக்டர் பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என்று விவசாயிகள் உறுதியளித்துள்ளனர். இந்த பேரணியில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் டெல்லி எல்லையில் டிராக்டர்களுடன் குவிந்துள்ளனர். மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாதவாறு, ஆங்காங்கே சாலைகளின் குறுக்கே டிரக் லாரிகளை நிறுத்தியும் பாரிகேட் தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர். டெல்லி எல்லையில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வரும், பிப்.முதல் நாளில் பட்ஜெட் தாக்கலின்போது, பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்துவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துபோய் உள்ளது.