டில்லி

பிரதமரால் அறிமுகம் செய்யப்பட்ட ஜன் தன் யோஜனா திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி வசதி கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜன் தன் யோஜனா என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தது.   அந்த திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு புது வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

இந்த வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை.  ஏ டி எம் கார்டுகளும் அளிக்கப்பட்டன.  இதனால் எளிய மக்கள் இடையே இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது.   இதில் முதல் வருடத்தில் மட்டும் 17.90 கோடிக் கணக்குகள் தொடங்கப்பட்டன

இவ்வாறு இதுவரை 44.23 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.  இவற்றில் 34.9 கோடிக் கணக்குகள் பொதுத்துறை வங்கிகளிலும் 8.05 கோடிக் கணக்குகள் கிராம வங்கிகளிலும் 1.28 கோடிக் கணக்குகள் தனியார் வங்கிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன.   இந்த கணக்குகளில் இதுவரை போடப்பட்டுள்ள தொகை ரூ.1.5 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.