புதுச்சேரி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ரூ.100ஐ நெருங்கி உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1.40 குறைத்து, மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 92.55 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை ரூ.86.08 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளின் வரியே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் வசூலித்து வருகிறது. அத்துடன் மாநில அரசு விதிக்கும் வரி காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மாநில அரசின் வரி சற்று குறைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரியிலும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1.40 குறைக்கப்படுவதாக மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி புதுச்சேரி உள்ளிட்ட நான்கு கிராமங்களிலும் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி துணைநிலை ஆளுநர் வாட் வரி விகிதத்தை 2 சதவீதமாக குறைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் அளவில் குறைய வாய்ப்புள்ளது.
இந்த வரிக்குறைப்பினால் ஆண்டொன்றுக்கு சுமார் 71 கோடி ரூபாய் வரை மக்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.