பங்களாதேஷ் நாட்டில் உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அந்நாட்டில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
ஜூன் – ஜூலை மாதங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான ஆர்டர்களையும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் கோடைக்கான ஆர்டர்களும் வரும் நிலையில் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியை ஜவுளி நிறுவனங்கள் சந்தித்து வருகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் நெருங்கும் நிலையில் பங்களாதேஷில் இயங்கிவந்த ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயலிழந்ததை அடுத்து முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன.
சாரா போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் நொய்டா பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி வளாகங்களில் தங்கள் ஆர்டர்களை திருப்பிவிட்டுள்ளன.
இதனால் நொய்டாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15 சதவீத கூடுதல் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தவிர, தமிழகத்தின் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கும் ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திருப்பூரில் மட்டும் கடந்த இரண்டு வாரங்களில் ஜெர்மனியில் இருந்து KiK, நெதர்லாந்தைச் சேர்ந்த ஜீமன் மற்றும் போலந்தின் பெப்கோ ஆகிய பேஷன் நிறுவனங்களிடம் இருந்து சுமார் ₹450 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சராசரியாக ஒரு ஆடைக்கு 3 டாலர் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் நொய்டா பகுதியில் சாரா நிறுவனம் ஆடை ஒன்றுக்கு $5 முதல் $9 வரை வழங்குகிறது.
குழந்தைகள் உடைகள், நைட்வேர், டாப்ஸ் மற்றும் பைஜாமாக்கள் தவிர பெண்களுக்கான டாப்ஸ் மற்றும் ஆடைகளின் ஆர்டர்களே அதிகளவு வந்துள்ளது.
இந்திய ஏற்றுமதி ஆடை நிறுவனங்களை நோக்கி மீண்டும் ஆர்டர்கள் வந்திருக்கும் நிலையில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் அவசியத்தை இந்தச் சூழ்நிலை எடுத்துக்காட்டுவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.