டெல்லி: தலைநகர் டெல்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைமுதல்வரான ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை ஆட்சி செய்து வந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு, மதுபான கொள்கை ஊழல் முறைகேட்டால் ஆட்சியை இழந்தது. டெல்லியில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. பாஜக ஆட்சியாளர்கள், ஆம்ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது அரை நிரந்தர கட்டமைப்புகளை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் 30ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முந்தைய கல்வி அமைச்சரான மணீஷ் சிசோடியாவுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் இணை ஆணையர் மதுர் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்த சம்மனில், ஜூன் 6 ஆம் தேதி ஆஜராகுமாறு சத்யேந்தர் ஜெயினுக்கும், ஜூன் 9 ஆம் தேதி ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று மதுர் வர்மா தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-A இன் கீழ் உரிய அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு இவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் மதுர் வர்மா கூறியுள்ளார்.
டெல்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு, பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்காந்த் பக்ஷி ஆகியோர் டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தனர். புகாரில், ஒரு வகுப்பறை கட்டுவதற்கு சராசரியாக ரூ. 24.86 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இது போன்ற கட்டமைப்புகளைக் கட்ட ரூ. 5 லட்சம் போதும் என பொறியாளர்கள் மதிப்பிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது என்றும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுடள்ளது.