தர்மசாலா: மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து தற்போதைய கேப்டன் விராத் கோலியிடமிருந்து எந்த தெளிவான பதிலையும் பெற முடியவில்லை.
அதேசமயம், மகேந்திர சிங் தோனி உடனான தனது டி-20 ஆட்டம் குறித்து அவர் பதிவுசெய்த டிவீட்டில் எந்த உள்ளர்த்தமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.
உலகக்கோப்பை தொடர் முடிந்ததிலிருந்து, முன்னாள் கேப்டன் தோனி, எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் இடம்பெறவில்லை. எனவே, அவரின் ஓய்வு குறித்து பல குழப்பங்களும் கேள்விகளும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், கோலி பதிவுசெய்த டிவீட்டால் அந்த குழப்பம் மேலும் அதிகரித்தது. டோனியிடமிருந்து எந்த அறிவிப்பும் வராத நிலையில் எதற்குமே விடை கிடைக்காமல் உள்ளது.
இந்நிலையில்தான் தான் பதிவுசெய்த டிவீட்டில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார் விராத் கோலி. குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தோனிக்கான இடம் இன்னும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, நிறைய பேசிய கோலி, எதையுமே தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
“அனுபவம் என்பது எப்போதுமே முக்கியமானது. நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, அது அப்படித்தான். மக்களின் கருத்தை தவறு என்று விளையாட்டு வீரர்கள் பலமுறை நிரூபித்துள்ளார்கள். அதை தோனியும் பலமுறை செய்துள்ளார். அவர் இந்திய கிரிக்கெட்டின் பொருட்டு சிந்திக்கிறார். புதியவர்களுக்கு வாய்ப்பு தருவதைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோமோ, அதையேதான் அவரும் நினைக்கிறார்” என்று நடிகர் கமலஹாசன் ஸ்டைலில் பேசிக்கொண்டிருந்த கோலியிடமிருந்து தேவையான பதில் எதையும் பெற முடியவில்லை.