புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்துக்கு, உலக நாடுகளில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், கோவாக்ஸின் தடுப்பு மருந்தை, 2 லட்சம் டோஸ்கள் அளவிற்கு மியான்மர் மட்டுமே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பிலான தடுப்பு மருந்துகளின் டோஸ்கள், மியான்மர், மங்கோலியா, ஓமன், பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவாக்ஸின் மருந்து, ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.
இதுவரை, வெளிநாடுகளுக்கு 64.7 லட்சம் டோஸ்கள் நல்லெண்ண அடிப்படையிலும், 165 லட்சம் டோஸ்கள் வர்த்தக அடிப்படையிலும் அனுப்பி வைக்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. அந்த 64.7 லட்சம் நல்லெண்ண டோஸ்களில், 2 லட்சம் டோஸ்கள் மட்டுமே கோவாக்ஸின் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாக்ஸின் மருந்திற்கு அதிக வரவேற்பு கிடைக்காததன் காரணம், அது இன்னும் மூன்றாம் நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதுதான் என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது.