MIOT
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், அடையாறு ஆற்றை ஆக்கரமித்து உரிய அனுமதி இல்லாமல் மியாட் மருத்துவமனை கட்டப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாலேயே அங்கு மழை வெள்ளத்தின்போது உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.
அந்த மருத்துவமனையை இடிக்கவும், அதற்கு வழங்கப்பட்ட அத்தனை அனுமதிகளையும் ரத்து செய்யவும் டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், நந்தம்பாக்கம் காவல் நிலையம் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவமனை முறையான அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதாகவும், வெள்ள நீர் மருத்துவமனையில் புகுந்ததில் 75 பேர் இறந்ததாக கூறுவது கற்பனையானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இன்னும் 6 வாரத்தில் விசாரணை நிறைவடையும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொன்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.