முன்னாள் கனவுக்கன்னி, இந்நாள் களவுக்கன்னி (கோடி மதிப்பிலான சொத்தை ஆயிரத்துக்கு ஆட்டையைப்போடுவது களவுதானே!) ஹேமமாலினியை அறியாதவர் இருக்க முடியாது.
இவரது அம்மா ஜெயா சக்ரவர்த்தி என்பவர். ஹேமமாலினி போலவே, இவரும் (அந்தக்காலத்தில்) பிரபல நாட்டிய தாரகை… மற்றும் அரசியல்வாதி.
அவரது அரசியல் சித்து விளையாட்டு ஒன்றைச் சொல்கிறார் எம்.பி. திருஞானம்:
“1983ம் வருடம். இப்போதைய மத்திய அமைச்சர் மேனகாகாந்தி, அப்போது “தேசிய சஞ்சய் கட்சி”யை நடத்தி வந்தார். நான் அதன் மாநிலத்தலைவர். பெரம்பூர் போரக்ஸ் சாலையில்தான் தலைமை அலுவலகம் இருந்தது.
ஒரு நாள் கட்சி ஆபீஸ் முன்பாக பெரிய படகு கார் வந்து நின்றது. “அதுயார்.. அவ்வளவு பெரிய வி.ஐ.பி. நம்ம ஆபீஸூக்கு வர்றது” என்று ஆச்சரியத்துடன் யோசித்தவாரே வாசலுக்கு வந்தேன்.
காரை விட்டு இறங்கியவர் ஜெயா சக்ரவர்த்தி! நாடறிந்த நடனமங்கை! பிரபல ஹீரோயின் ஹேமமாலினியின் அம்மா!
இவர் ஏன் இங்கு வந்தார் என்று யோசித்தபடியே, வரவேற்றேன். அலுவலகத்துக்குள் வந்தவர், நாற்காலியில் அமர்ந்து, “நீங்கள்தான் மாநில தலைவரா” என்றார். “ஆமாம்..” என்றேன்.
“உங்கள் கட்சியில் சேர்கிறேன்” என்றார்.
எனக்கு இன்னும் ஆச்சரியம்.. அதோடு மகிழ்ச்சி! உடனே உறுப்பினர் படிவத்தைக் கொடுத்து நிரப்பச் சொன்னேன். நிரப்பித்தந்தார். உறுப்பினர் அட்டையும் வழங்கினேன்.
அவர், தனது பி.ஆர்.ஓவை தொடர்புகொண்டு ஏதோ பேசினார். “மேனகா காந்தியின் கட்சியில் ஹேமமாலியின் அம்மா ஜெயா சக்ரவர்த்தி சேரந்தார்” என்பதுதான் மறுநாள், நாடு முழுதும் உள்ள நாளிதழ்களில் தலைப்புச் செய்தி. கட்சியின் தேசியத் தலைவர் மேனகா காந்தி என்னை தொடர்புகொண்டு ஆஹா… ஓஹோ… என்று பாராட்டினார் !
அடுத்த நாள்.. ஜெயா சக்ரவர்த்தியின் மருமகனும், ஹேமாமாலினியின் கணவருமான நடிகர் தர்மேந்திராவின் மும்பை வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி ரெய்டு நடந்தது. சில பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அப்போது பிரதமர் இந்திராகாந்தி. அவருக்கு எதிராக அரசியல் செய்துகொண்டிருந்த மருமகள் மேனகா காந்தியின் கட்சியில் ஜெயா சக்ரவர்த்தி சேர்ந்ததை அவரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் தர்மேந்திரா வீடு, அலுவலங்களில் வருமானவரி ரெய்டு.
மிரண்டுபோன தர்மேந்திரா,மனைவி ஹேமமாலினி மூலம் ஜெயா சக்ரவர்த்திக்கு நெருக்கடி கொடுத்தார். “உடனடியாக மேனகா கட்சியிலிருந்து விலகுங்குகள். அதற்கான சான்றையும் வாங்கிக்கொண்டு மும்பை வாருங்கள்” என்று ஜெயாபச்சனிடம் கெஞ்சினார் ஹேமமாலினி.
ஜெயா சக்கரவர்த்தியின் படகு கார், மறுபடி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த “சஞ்சய் மன்ச் கட்சி” கட்சி அலுவலத்துக்கு வந்தது. காரிலிருந்து அவசர அவசரமாக இறங்கிய ஜெயா சக்ரவர்த்தி, அதே அவசரத்துடன் அலுவலகத்திற்குள் வந்து அவசர அவசரமாக விலகல் கடிதம் எழுதிக்கொடுத்தார்.
கட்சியில் சேர்ந்த மறுநாளே விலகும் விநோதம் அங்கே நடந்தது. அது மட்டுமல்ல… தான் ராஜினாமா செய்ததற்கான சான்று வேண்டும் என்று கேட்டார் ஜெயா சக்ரவர்த்தி!
“அப்படி ஏதும் வழக்கமில்லை..” என்று மறுத்துவிட்டேன். அரை மனதுடன் திரும்பிச்சென்றார் அவர்.
பிறகுதான் இன்னொரு தகவல் கிடைத்தது.
தனக்கு மும்பை சென்சார் போர்டு உறுப்பினர் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஜெயா சக்ரவர்த்தி. அது நடக்கவில்லை. ஆகவே காங்கிரஸ் கட்சியை மிரட்டும் முகமாக, மேனகா கட்சியில் இணைந்திருக்கிறார்!
மருமகன் வீட்டில் வருமானவரி ரெய்டு என்றதும், பதறிப்போய் ராஜினாமா செய்துவிட்டார். ரெய்டு புஸ் ஆகியது.
ஹேமமாலினி போலவே, அவரது அம்மாவும், அரசியலை சரியாக பயன்படுத்துகிறவர் என்பதை இதன் மூலம் அறியலாம்.
அது மட்டுமல்ல… இந்தக் கூத்துக்கள் எல்லாம் நடந்து முடிந்த அடுத்த வாரம் பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது:
“பிரபல நாட்டிய தாரகை ஜெயா சக்ரவர்த்தி மும்பை சென்சார் போர்டு உறுப்பினர் ஆனார்.”
அரசியல்!
(ஆதாரம்: திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு: https://www.facebook.com/thirugnanam.mylaporeperumal/posts/916878848431800?pnref=story)