சென்னை
தனது மனைவி சென்னையில் வெடிகுண்டு வைக்க உள்ளதாக குடிபோதையில் ஒரு கணவர் பொய்ப் புகார் அளித்துள்ளார்.
நேற்று முன் தினம் மாலை சுமார் 5.45 மணிக்கு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ஒருவர் தனது மனைவி யாருடனோ தொலைபேசியில் பேசுவதை தற்செயலாக கேட்க நேர்ந்ததாகவும் அவர்கள் அனைவரும் இணைந்து சென்னை செண்டிரல் ரெயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளதகவும் தெரிவித்தார். அத்துடன் அந்த வெடிகுண்டு நேற்று மாலைக்குள் வெடிக்கும் எனவும் கூறி விட்டு அவர் அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் நகர காவல்துறை உடனடியாக செண்டிரல் ஸ்டேஷனில் முன்னெச்சரிககை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் குண்டு வைக்க திட்டமிட்ட அந்தப் பெண்ணை பிடிக்கவும் மற்றொரு பிரிவினர் முயற்சி செய்து வந்தனர் அந்தப் பெண்ணை பற்றி விவரம் தெரியாததால் தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என தேடி உள்ளனர்.
காவல் கட்டுப்பாட்டு அறையில் அந்த எண் பதிவாகி இருந்தது. அதை ஒட்டி அந்த எண்ணுக்குரியவரை தேடி கண்டு பிடித்துள்ளன்ர். அவர் தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கும் சரவனன் என்பதும் அவர் மனைவியின் பெயர் மலர்விழி எனவும் தெரிய வந்தது. காவல்படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து இருவரையும் தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
அப்போது சரவணன் குடிபோதையில் இவ்வாறு பொய்ப் புகார் அளித்தது தெரிய வந்துள்ளது. சரவணனுக்கும் மலர்விழிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆகவே அவரை காவல்துறையினரிடம் சிக்க வைப்பதற்காக இப்படி ஒரு கொடூர பழியை சரவணன் சுமத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் குடிபோதையில் இவ்வாறு செய்து விட்டதாக சரவணன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் காவல்துறையினர் சரவணனை எளிதில் விட எண்ணவில்லை. தங்களை செண்டிரல் மற்றும் தேனாம்பேட்டையில் சுற்றி அலைய வைத்ததற்காக சரவணன் மீது கடும் கோபம் கொண்டுள்ள காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.