வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், நவீன டிஜிட்டல் முறையில் தற்போது வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்றிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்தத் திரைப்படம் 1959ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் வெளியானது. இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கிய இத்திரைப்படத்தில், சிவாஜியோடு, ஜெமினி கணேசன், பத்மினி, குலதெய்வம் ராஜகோபால், ஜாவர் சீதாரமன், வி.கே. ராமசாமி, எஸ். வரலட்சுமி, ஓ.ஏ.கே. தேவர் போன்றோர் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
இத்திரைப்படத்தை சிவாஜி நாடக மன்றம் மூலமாக 116 தடவைக்கும் மேலாக நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார். இந்தத் திரைப்படம் தென்மண்டலமெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்பே இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் பண்டிதர் ஜவஹர்லால் நேருவும், அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் பங்கேற்றார்கள்.
1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் இப்படத்தின் மூலம் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம். இரண்டு பெரிய கண்டங்கள் (ஆசியா, ஆப்ரிக்கா) கலந்துகொள்ளும் இவ்விழாவில் விருது வாங்கிய முதல் ஆசியத்திரைப்படமாகவும், முதல் இந்தியப்படமாகவும், முதல் தமிழ் திரைப்படமாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன் முத்திரை பதித்தது.
அன்றைக்கு கெய்ரோவில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் கெய்ரோ மாநகராட்சி நடிகர் திலகத்தை அந்நகருக்கு வரவேற்றுக் கொண்டாடியது மட்டுமில்லாமல் அந்நகர மேயர் நகரத்தின் “சாவியை” சிவாஜி கணேசன் அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார் என்பது பெருமையான செய்தி. பின்னர் எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது, பிரதமர் நேருவின் அனுமதியோடு, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் (அப்போது பாலர் அரங்கம்) அவரை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் எகிப்து அதிபர் நாசரை சென்னைக்கு அழைத்து சிறப்பித்ததோடு தன் வீட்டிலே விருந்தும் அளித்தார். இந்தப்பெருமை பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனையே சேரும்.
தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு, அவர் தூக்கிலிடப்பட்ட பகுதியான ஒருங்கிணைந்த நெல்லைமாவட்டம் கயத்தாரில் 1971ம் ஆண்டு 47 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். அந்தச் சிலையை குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.
1999 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை முறைப்படி தமிழக அரசிடம் ஒப்படைத்தார் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் புதுபொலிவுடன், புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
வீரபாண்டியனின் வாரிசான குருசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நீக்க வைகோ அவர்கள் முயற்சித்து வெற்றி பெற்றதும், உயர்நீதிமன்றத்தில் குருசாமியை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றிய வழக்கை நடத்தியவன் நான் என்பதையும் பெருமையோடு நினைவு கூர்கிறேன்.
இந்த நிலையில் தூக்கு தண்டனை பற்றிய சமீப செய்தி ஒன்றையும் பகிர்ந்துகொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மரணதண்டனை குறித்து தெளிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மத்திய சட்ட கமிஷனுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், “மரண தண்டனை என்பது முக்கியமான பிரச்சனை. சட்ட வல்லுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தில் முக்கியமானவர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்றும் கூறியது.
இதன் அடிப்படையில் மத்திய சட்ட கமிஷன், குழு அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்தது. இந்தக் குழுவுக்கு நானும் தெளிவான விளக்கங்களோடு கடிதம் எழுதி இருக்கிறேன்.
இந்த குழு, முடிவை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்ய இருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் உரிய திருத்தங்களோடு மசோதாவை தயாரிக்க முனையும். அதற்காக அனைத்து மாநில அரசுகளின் கருத்து அறிய தாக்கீதும் அனுப்பும்.
தூக்குத்தண்டனைக்கு எதிரான கருத்துகள் எழுந்து, முழுதுமாக மரணதண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.
தூக்குதண்டனைக்கு எதிரான குரல் அதிகரித்துக் கொண்டு வருவதைப் பார்க்கும்போது, அப்படித்தான் நடக்கும் என்று தெரிகிறது. தேசத்துக்காக போராடி தூக்குதண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், திரைப்படமாக தற்போது நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த சூழலில், “மரணதண்டனை என்பதே இனி இந்தியாவில் கிடையாது” என்ற அறிவுப்பு வந்தால் எத்தனை பொருத்தமாக இருக்கும்?