
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒகாரா மாவட்டத்தில் வசிப்பவர் உமர் த்ராஸ். இவர், தன் வீட்டு மாடியில் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். இதையடுத்து அந்நாட்டு காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.
காவல்துறையினர், “உம்ர் த்ராஸின் வீட்டை சோதனையிட்டோம். அவரது மொட்டைமாடியிலிருந்து இந்தியக் கொடியை கைப்பற்றியுள்ளோம். சட்ட ஒழுங்கை கெடுக்கும் விதத்தில் அவர் செயல்பட்டார் என்பதால் கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உமர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் விராட் கோலியின் போஸ்டர்கள் ஏராளமாக இருந்தன.
இது பற்றி பேசிய உமர், “நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். அவர் இந்திய அணியில் இருப்பதால் நான் அந்த அணியை ஆதரிக்கிறேன். . இந்திய கிரிக்கெட் அணியின் மீது எனக்குள்ள அன்பை வெளிப்படுத்தவே கொடியை ஏற்றினேன். நான் வெறும் ரசிகன் மட்டுமே. உளவாளி அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்திய கொடியை ஏற்றியது தவறு என தெரியாது. ஆகவே என்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று காவல்துறையினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel