திருச்செந்தூர்: ஆறு தலைவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என்று ரைமிங்காக பேசி அசத்தினார் தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா.
திருச்செந்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரேமலதா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் இதுவரை அமையாத வெற்றிக் கூட்டணியாக நமது கூட்டணி அமைந்திருக்கிறது. திருச்செந்தூர் தான் முருகப்பெருமான் எதிரிகளை துவம்சம் செய்து சூரசம்ஹாரம் செய்த தொகுதி. அந்த சூரசம்ஹாரம் போல எதிரிகளை வீழ்த்தி இந்த தொகுதியை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும்.
பஞ்சபாண்டவர்களாக இருந்த நமது கூட்டணி இப்போது ஆறு தலைவர்களை கொண்ட ஆறுபடை வீடுபோல ஆறுமுக கூட்டணியாக உள்ளது. ஆறுமுகம் என்றாலே ஏறுமுகம் தான். இனி இறங்கு முகம் கிடையாது. இந்த ஏற்றம் இனி தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் இங்கே முறை வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால், இந்தத் தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்துள்ளாரா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை மிக மோசமாக உள்ளதை பார்க்கும் போது, இந்த ஆட்சியின் நிலையை நினைத்து வேதனை ஏற்படுகிறது.
பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். 100க்கும், 500க்கும் ஓட்டுப் போட்டால் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் திருச்செந்தூர் வளர்ச்சி பெறவே முடியாது. சாலை இப்படியே தான் இருக்கும்: என்று பிரேமலதா பேசினார்.
அவர் பேசும் போது தொண்டர்கள் கூச்சலிட்டு கொண்டே இருந்தார்கள். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பல முறை அவர் கூறினார். ஆனால் தொண்டர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்தார்கள். மேலும் கொடிகளை மறைத்தபடி நின்றனர். கொடியை இறக்கும் படி பலமுறை கேட்டுக்கொண்டார். தொண்டர்கள் கேட்கவில்லை.
ஆகவே விஜயகாந்த் ஸ்டைலில் எரிச்சலான பிரேமலதா, “ஆறு கட்ட பிரச்சாரம் செய்துவிட்டேன். வேறு எங்கும் இப்படி தொண்டர்கள் கூச்சல் இடவில்லை. அமைதியாக இருக்கப்போகிறீர்களா இல்லையா.. ” என்று ஆவேசத்துடன் கேட்டார். அப்படியும் தொண்டர்கள் கூச்சலை நிறுத்தாததால் தனது பேச்சை குறைத்துக்கொண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார்.