boy2
வாணியம்பாடியில் இன்று தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த 6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர். இவருடைய மகன் கபில் (வயது6). அருகில் உள்ள நூருல்லா பேட்டையில் அவனது பாட்டி வீடு உள்ளது. அங்கு தாயுடன் சென்றிருந்த கபில் இன்று காலை தனியாக அவர்களது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். ஆற்றுமேடு தனியார் பள்ளிக்கூடம் அருகே வந்தான். அப்போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை. தெருவில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக நின்றிருந்தன. அதில் ஒருநாய் கபிலை பார்த்து விரட்டியது.
நாய்கள் கடித்து புதருக்குள் இழுத்து சென்றது. அதனை பின் தொடர்ந்து அனைத்து நாய்களும் சென்றன. சிறுவன் கபிலை மடக்கிய நாய்கள் பாய்ந்து கடிக்க தொடங்கியது. நாய்கள் பாய்ந்ததால் கபில் தரையில் சாய்ந்தான். அவனை நாய்கள் மாறி மாறி கடித்தன. ரத்தம் பீறிட்டது. இதனை நாய்கள் ருசிகண்டன. கபிலை மேலும் கடிக்க தொடங்கியது. வலிதாங்காமல் கபில் அலறி கூச்சலிட்டான்.
அருகில் இருந்த புதருக்குள் கபிலை நாய்கள் இழுத்து சென்றன. வலிதாங்காமல் கபில் போட்ட சத்தம் அந்த பகுதியில் பயங்கரமாக கேட்டது. இதனை கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர். நாய்களின் பிடியில் சிறுவன் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே நாய்களை அடித்து விரட்டினர். புதருக்குள் ரத்த காயங்களுடன் கபில் துடித்தான். அவனை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாய்கள் சிறுவனை கடித்து குதறியுள்ளது.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வாணியம்பாடி டவுன் பகுதியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நகரின் சில பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் குழந்தைகளை தனியாக தெருக்களில் நடமாட விட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.