bb
தமிழகத்தை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது லாட்டரி சீட்டு விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மற்றும் கேரளாவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
கடந்த 2007–ம் ஆண்டு கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பத்திரிகைக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்ததாக வெளியான புகார் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்கட்சிகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. மத்திய அமலாக்க துறையினரும் மார்ட்டினின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனத்தினர் பணபரிவர்த்தனையில் பல்வேறு மோசடி கள் செய்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது சொத்துக்களை முடக்க அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று கோவையில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான 4 நிறுவனங்களின் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.122.40 கோடியாகும். இதனை அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.