தற்போது மீடியா எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் குறும்படம் லட்சுமி.    இந்த படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் அனல் பறக்கும் விமர்சனங்கள் இணைய தளத்தை சூடாக்கி வருகிறது.   ஒண்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் யூ ட்யூபில் இந்தப் படம் தரமேற்றப்பட்டுள்ளது.

கே எம் சர்ஜுன் இயக்கிய இந்தக் குறும்படம் லட்சுமி என்னும் பெண்ணுக்கு ஏற்படும் திருமணத்தை மீறிய உறவைப் பற்றிய கதையமைப்பைக் கொண்டது.   ஒரு சாதாரண குடும்பப் பெண்ணான லட்சுமி, (லட்சுமிப்ரியா நடிக்கிறார்)  தனது குடும்பத்தை கவனிப்பதும் உணவு சமைப்பதுமே முக்கிய வேலையா இருக்கிறாள்.   அவள் கணவர் அந்தப் பெண்ணை அதற்கு மேல் மதிப்பதில்லை.   படுக்கையிலும் அவன் தன் சுகம் முடிந்ததும் அவளை விட்டு உடனடியாக விலகுகிறான்.     அவனுக்கு மற்றொரு பெண்ணிடம் இருந்து ஒரு நாள் ஒரு ஃபோன் கால் வ்ருகிறது.   அதை எடுத்துப் பேசிய லட்சுமியிடம் மறு பக்கத்தில் இருந்த பெண் பதில் ஏதும் சொல்வதில்லை.   கணவனும் அந்தப் பெண்ணைப் பற்றி இவள் கேட்டதற்கு பதில் அளிப்பதில்லை.

லட்சுமி ஒரு அச்சகத்தில் பணி புரிகிறாள்.   தினமும் ரெயிலில் அவள் ஒரு அழகான வாலிபனைப் பார்க்கிறாள்.    சிறிது சிறிதாக அவர்கள் புன்னகையை பகிர்ந்துக் கொள்கின்றனர்.   ஒரு நாள் ரெயில் ஒரு மறியலால் நிறுத்தப்பட இருவரும் ஒரு பஸ் நிறுத்தத்தில் பேசிக் கொள்கின்றனர்.    கதிர் என்னும் அந்த இளைஞனுடன் அவனுடைய வீட்டுக்குச் சென்று அவனுடன் லட்சுமி ஓரிரவைக் கழிக்கிறாள்.    அடுத்த நாள் கணவனிடம் அவள் தான் இனி ரெயிலில் செல்லப்போவதில்லை எனவும் பஸ்ஸில் தான் செல்லப் போவதாகவும் கூறி விடுகிறாள்.   இத்துடன் முடியும் இந்த குறும் படம் பார்ப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முடிவை யோசிக்க வைக்கிறது.    லட்சுமி தான் திரும்பவும் தவறு செய்ய விரும்பாததால் ரெயிலில் செல்லவில்லை என சிலரும்,  தினமும் பஸ் நிறுத்தத்தில் கதிரை சந்திக்க அவள் பஸ்சில் செல்வதாக சிலரும் முடிவை புரிந்துக் கொண்டுள்ளனர்.

எது எப்படி இருப்பினும் இந்த குறும்படம் “லட்சுமி” இணையத்தை கலக்கி உள்ளது.   அவள் கதிரை சந்திக்கும் நேரத்தில் வண்ண மயமாகவும்,  வீட்டில் இருப்பதை கருப்பு வெள்ளையாகவும் சித்தரிக்கப்படுகிறது.   இருபது நிமிடம் கூட இல்லாத இந்தப் படம் இணையத்தில் பலரும் எதிர்க்கக் காரணம் அந்த கதிர் கதாபாத்திரம் பாரதியார் கவிதைகளைச் சொல்லி லட்சுமியை கவர்வது போல வருவது தான் எனது குறிப்பிடத்தக்கது.    எதிர்பாளர்கள் அனைவரும் வைக்கும் மற்றொரு கருத்து இதனால் திருமணம் என்னும் பந்தமே கேள்விக்குறி ஆகும் என்பதுதான்.

அதே நேரத்தில் இந்த குறும்படத்தின் ஆதரவாளர்கள் ஒரு பெண்ணால் கணவனின் துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடியாததால் இந்த உறவை ஏற்றுக் கொள்கிறாள் என்பதே முதல் காரணம்.    ரெயில் நின்று போனதால் லட்சுமி கணவனிடம் அவள் தனது தாய் வீட்டில் தங்கப் போவதாக ஃபோனில் சொல்லும் போது அவள் கணவன் “நாளை சமையல் யார் செய்வது” என கேட்கிறான்.    மனைவியை மதிக்காமல் அவள் உழைப்பை மட்டுமே உறிஞ்சும் கணவனை பழிவாங்க அவள் கதிர் வீட்டில் தங்குவதில் தவறொன்றுமில்லை என வாதிடுகின்றனர்.    மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கையில் சிறிது மன மகிழ்ச்சிக்காக ஏங்கியே அவள் கதிரின் அழைப்பை ஏற்கிறாள் எனவும் கூறுகின்றனர்.

ஆனால் திரைப்படங்களில் நடைபெரும் ஆண்களின் இது போல செய்கைகளை யாரும்  இவ்வளவு கண்டித்ததில்லை.   உதாரணத்துக்கு மனைவி இருக்கும் போதே மற்றொரு பெண்ணிடம் தொடர்பு கொள்ளும் நாயகர்களைக் கொண்ட சிந்துபைரவி,  கோபுரங்கள் சாய்வதில்லை, சதி லீலாவதி,  ரெட்டை வால் குருவி, சின்னவீடு போன்ற படங்களில் வரும் கதாநாயகர்களை யாரும் கண்டித்து இவ்வளவு விமர்சனங்களை எழுப்பியதில்லை.   அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் இரு மனைவிகளுடன் வாழும் ஒரு அதிகாரியை அந்த இரு மனைவிகளுமே கண்டிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.    இதில் மாறுதலான ஒரே படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மறுபடியும் என்னும் திரைப்படம் மட்டுமே   அதில் மற்றொரு பெண்ணிடம் வாழ்க்கை நடத்திவிட்டு வரும் கணவனுடன் சேர மனைவி மறுத்து கணவனை திருப்பி அனுப்பி விடுவார்.

இப்படி இருக்க ஆண் தவறு செய்வதைக் கண்டுக் கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு பெண் வாழ்க்கையில் தவறு செய்வதை ஒப்புக் கொள்ள மனம் இல்லாத ஆணாதிக்க வாதிகள் மட்டுமே இந்த குறும்படத்தை எதிர்ப்பதாக பலரும் சொல்கிறார்கள்.   இந்த விமர்சனங்களால் இந்த குறும்படம் கிட்டத்தட்ட 9.4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.   நமது வாசகர்களுக்காக அந்தப் படத்தின் லின்க் இதோ

[youtube https://www.youtube.com/watch?v=vP5dOY42DKI]