மீண்டும் அமைச்சர் மூக்கூர் மீது குற்றச்சாட்டு!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் அ.இராஜன் என்பவர் தனது லெட்டப் பேடில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், “திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராகவும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் உள்ள முக்கூர் என். சுப்பிரமணியனிடம் வேலைக்காக லஞ்சமாக 13 லட்ச ரூபாய் கொடுத்தேன். ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் அமைச்சர் வேலை வாங்கித் தரவில்லை.
பணத்தை திருப்பிக்கேட்டால், “என் பி.ஏ. சதீஸ்குமாரை பார், என் மனைவியிடம் வாங்கிக்கொள் என்று அலைக்கழிக்கிறார். இதனால் பணம் கொடுத்தவர்கள் என் குடும்ப உறுப்பினர்களை அவதூறாக பேசுகிறார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு செய்து உதவுமாறு தங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதம், கசிந்து தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
புகார் கொடுத்த ராஜனிடம் பேசினோம். அவர், “அமைச்சர் ஏமாற்றியது உண்மை. இது பற்றி தலைமைக்கு கடிதம் கொடுத்தேன். அது எப்படியோ லீக் ஆகிவிட்டது.” என்றார்.
“வேலைக்காக லஞ்சம் கொடுப்பது முறைதானா” என்றோம். “எதுவும் பேச விரும்பவில்லை” என்று தொடர்பை துண்டித்தார். .
ஏற்கெனவே அமைச்சர் முக்கூர் சுப்பிரணியனிடம், வேலைக்காக லஞ்சம் கொடுத்து ஏமாந்ததாக, ஆரணி ஒன்றிய அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சண்முகம் என்பவர், விஷம் குடித்ததும் குறிப்பிடத்தக்கது.