டில்லி: ராணுவ உயர் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் திளைப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தரம் குறைந்த உணவு வழங்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய, பி.எஸ்.எப்., வீரர் தேஜ் பஹதுார் யாதவ், பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஜம்மு – காஷ்மீரில் பணிபுரிந்துவந்த, , எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்., ) வீரர் தேஜ் பஹதுார் யாதவ், சமூக வலைதளத்தில் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் பதிவிட்ட வீடியோவில், ‘உயரதிகாரிகள் லஞ்ச ஊழலில் திளைக்கிறார்கள். வெறும் மஞ்சள் பொடியும், உப்பும் கலந்த தண்ணீர் நிறைந்த பருப்பு கடைசல், கருகிப் போன ரொட்டித் துண்டுகளே, வீரர்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி, இந்தியா முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. வீரரின் புகார் குறித்து விசாரிக்க, துணை ராணுவப் படை மூத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தேஜ் பஹதுாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர், தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது நிரூபணம் ஆனதாக பாதுகாப்பு படை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, பி.எஸ்.எப்., உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தன் பணி நீக்கத்தை எதிர்த்து, தேஜ் பஹதுார், மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.