வண்டலூரை அடுத்துள்ள பிரபல கல்லூரியில், மாணவர்களிடையே “செல்ஃப் கான்ஃபிடன்ஸ்” பற்றி பேச வேண்டும் என்று அழைத்திருந்தார்கள். மதியம்தான் அங்கே புரோகிராம். காலையிலேயே சுகன், சுந்தர்ஜி, அன்பு என்று நண்பர் குழாமுடன் கிளம்பிவிட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்கள். பின்னால் அவர்களைப்பற்றிச் சொல்கிறேன். சுகன் சினிமாக்காரர். சுந்தர்ஜி பத்திரிகையாளர். சுகன் அரசியல் பிரமுகர். அன்பு, ஏற்றுமதியாளர். கார் கிளம்பயதுமே எங்கள் பேச்சுக் கச்சேரியும் களைகட்ட ஆரம்பித்தது.
“எல்லா விசயத்துலயும் ஃபாரின், ஃபாரின்தாம்பா… 3டி ஓவியங்கள்ல கலக்குறாங்க… படத்துல இருககிற குரங்கு நமக்கு கை கொடுக்கற மாதிரியே இருக்கு… வெளிநாட்டுக்காரங்க திறமை நமக்கு வராதுப்பா.” என்று வழக்கம்போல ஃபாரின் புகழ் பாட ஆரம்பித்தார் அன்பு.
அவரை இடைநிறுத்திய சுகன், “மகாபாரதத்திலேயே த்ரிடி கு ஓவியம் பற்றி சொல்லியிருக்குப்பா … அதாவது மகாபாரம் எழுதப்பட்டப்போ அந்த மாதிரி நிஜம்னு நம்பவைக்கிற மாதிரி வரையற திறமை இங்கே இருந்திருக்கு. ஆனா நாமதான் நம்ம பாரம்பரியம் பற்றி தெரிஞ்சுக்காம ஃபாரின், ஃபாரி்ன்னு புலம்பறோம்” என்றார்.
ஆச்சரியப்பட்ட அன்பு, ““என்னது மகாபாரத்திலேயே த்ரி டி ஓவியமா..” என்றார் ஆச்சரியமாய்.. “ஆமாம்.. பாரதம் படிச்ச எல்லாருக்கும் அது தெரியும். உமக்குத்தெரியல..” என்று கிண்டலாகச் சொல்ல, “சரி. தெரியாததை சொல்லாமே” என்று இறங்கி வந்தார் அன்பு.
சுகன் பேச ஆரம்பிக்க… கார் திரும்பி நின்றது. மடிப்பாக்கத்திலிருந்து கைவேலி திரும்பும் முனை. ஏகப்பட வாகன நெரிசல். “இந்த நேரத்துல டிராபிக் ஜாம் ஆக வாய்ப்பே இல்லையே…” என்று நினைத்தபடியே இறங்கினேன்.
ஜே.சி.பி. இயந்திரம் ஒன்று நடு சாலையில் நின்றபடி, சாலையோர மண் மேட்டை அகற்றிக்கொண்டிருந்தது. காத்திருந்த வாகன ஓட்டுனர் ஒருவர், “அரை மணி நேரமா நிக்கறோம்.. பத்து நிமிசம் வழிவி்ட்டு மறுபடி வேலை செய்யலாம்னா அந்த ஜே.சி.பி. ஓட்டுனர் கேட்க மாட்டேங்கிறார்” என்று புலம்பினார்.
,அடுத்து ஒரு அரை மணி நேரம் தனது வேலையை முடித்துவிட்டுத்தான் ஜே..சி.பிகாரர் வழிவிட்டார்.
“இந்த மாதிரி சாலை பணிகளை இரவு நேரத்தில் செய்தால் அவர்களது வேலையும் கெடாது.. டிராபிக் ஜாம் ஆகி மக்களுக்கும் தொல்லை இருக்காது.. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தெரிவதில்லைய” என்ற ஆதங்கக்குரல்களும் ஒலித்தன.
மாநகராட்சி நிர்வாக கவனத்துக்கு..!
மீண்டும் கார் புறப்பட.. மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்த எஃப்.எம் மில் செய்திச் சுருக்கம் ஆரம்பிக்க கவனிக்க ஆரம்பித்தோம். , “இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது தமிழகம்: என்றது செய்தி.
“அடக் கொடுமையே.. நம்ம சாதனை இதுதானா.. ? வறுமை வேலையில்லா திண்டாட்டம் குடும்பப் பிரச்சினை என்று எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், மது பெருகி ஓட ஆரம்பித்ததும்தான் தற்கொலைகள் பெருக ஆரம்பித்திருக்கிறது “ என்றார் வருத்தத்துடன்.
“ஆமாம்.. உண்மைதான்” என்ற சுந்தர்ஜி, “இன்னொரு விசயம், தமிழர்களுக்கு ஆதிகாலத்திலிருந்தே தற்கொலை மனோபாம் அதிகம். அரசன் இறந்தால் வீரனும் தனது தலையை வெட்டிச் சாவது.. அரசனுக்கு உடல் நலமில்லை என்றால் குணமாகவேண்டும் என்று கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பலியாவது என்று அப்போதே இருந்திருக்கிறது.
அவ்வளவு ஏன், சமீபகாலத்துல நடந்த சில விசயங்களை கவனிச்சாலே தெரியும்… க.ப. அறவாணன் எழுதிய “தமிழர்கள் + தற்கொலைகள்” அப்படிங்கிற புத்தகத்திலு படிச்ச விசயம் நல்லா ஞாபகமிருக்கு.
எம்.ஜி.ஆர். இறந்தபோது 26 தமிழர்களும் கருணாநிதி கைது செய்யப்பட்டோது 48 தமிழர்களும் தற்கொலை செஞ்சிக்கிட்டாங்க. கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி காஞ்சி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது 2 தமிழர்கள் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.
இந்திராகாந்தி இறந்த போது துயரம் தாங்காம 17 பேர் தற்கொலை செஞ்சுகிட்டாங்க… அவங்கள்ல 15 பேரு தமிழ்நாட்டுல வசிச்ச தமிழர்கள். அவங்களோட ஒரிசாவைச் சேர்ந்த ஒருத்தரும், மலேசியாவைச் சேர்ந் இன்னொருத்தரும் தற்கொலை செய்துகிட்டாங்க. அவங்க ரெண்டு பேருமே தமிழங்கதான். ஜீவ்காந்தி மரணத்தின் போது தற்கொலை செய்தகொண்ட 9 பேரும் தமிழர்கள்தான்” என்று சொல்லி அதிரவைத்தார்.
பேச்சு சுவாரஸ்யத்தில் வண்டலூர் மிருககாட்சி சாலை வந்ததே தெரியவில்லை. டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேம். கொட்டும் செயற்கை அருவி வரவேற்றது சற்று நேரம் பார்த்து ரசித்துவிட்டு நடக்க ஆரம்பித்தோம். புதர்களுக்கிடையே இளம் காதல் ஜோடிகள் எசகுபிசகாக இருந்ததை அனுமானிக்க முடிந்தது. .
“பொது இடத்துல இப்படி நடந்துக்கிறாங்களே.. வீட்ல பெரியவங்கதான் பிள்ளைங்க கண்டிக்க மாட்டாங்கலா” என்று புலம்பியபடியே வந்தார் சுகன். அப்போதுதான் புதரிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஜோடி. அந்தப்பெண்மணிக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும். பக்கத்தில், கண்களில் கிறக்கமும் பயமுமாய் நின்றிருந்தான் இருபது வயது மதிக்கதக்க பையன்.
“லோகம் கெட்டுடுச்சு.. வேறென்ன சொல்ல..” என்று மீண்டும் புலம்ப ஆரம்பித்தார் சுகன்.
பாம்பு காட்சியகத்துக்குள் நுழைந்தோம். கண்ணாடி அறைகளுக்குள் விதவிதமான பாம்புகள். பெரும்பாலும், “ அடப் போங்கடா” என்கிமாதிரி, யாரையும் கவனிக்காமல் சுருண்டு படுத்திருந்தன பாம்புகள். நல்ல பாம்பு ஒன்று மட்டும்தான், கண்ணாடி அருகே வந்து நாக்கை நாக்கை நீட்டியது.
இங்கு பாம்புகள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.
“வயல் எலிகளை பாம்புகள் தின்பதால் பாம்பு நமது நண்பன்.”
“சுமார் 3000 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் இருபது சதவிகித பாம்புகள்தான் விஷம் உள்ளவை.”
“பாம்பு பால் குடிக்காது. ஊர்வன வகையைச் சேர்ந்த இதற்கு பாலூட்டிகளின் பால் தேவையில்லை.”
“பாம்பு நடனமாடுவது மகுடியின் ஓசைக்கு அல்ல. அசைவைப்பார்த்தே”
இப்படி நாம் அறிந்துகொள்ளவேண்டிய அவசிய தகவல்கள். இந்த வரிசையில் இருந்த ஒரு வாசகம்:
“இருதலை பாம்பு என்று கிடையவே கிடையாது. மண்ணுளி பாம்பின் தோல் தடித்து இருப்பதால் அதுவும் தலைபோல் தோன்றும். அதைத்தான் தவறாக இருதலை பாம்பு என நினைத்துக்கொள்கிறோம்.”
“பாம்புகளைப் பார்த்ததைவிட, அவை பற்றி படித்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது” என்று சொல்லியபடியே வந்தார் அன்பு. உண்மைதான். ஆனால் இந்த பாம்பரங்கத்தின் வெளியே நம்மை வரவேற்பது ஐந்து தலை நாகத்தின் சிற்பம்! . கடலில் அது குடைபோல நிற்க.. குட்டி கிருஷ்ணரை தலையில் சுமந்து செல்கிறார் வாசுதேவர்.
இதைப் பார்த்த சுகன், “கடவுள் பற்றிய கதைகளையும், அறிவு சார்ந்த விசயங்களையும் குறைந்தபட்சம் பிரிச்சி வைக்கணும்.. இங்கே எதுக்கு இந்த சிலை” என்று கோபப்பட்டார். “ அதெப்படி… கடவுள்னா ஏதோ தப்பான விசயம் மாதிரி சொல்றீங்க..” என்று பதிலுக்கு கோபப்பட்டார் அன்பு.
விவகாரம் வேண்டாம் என்பதற்காக “ அதெல்லாம் இருக்கட்டும். சினிமா செய்தி ஒண்ணு சொல்றேன்” என்று ஆரம்பித்தேன். பேச்சை திசைமாற்றுகிறேன் என்று புரிந்துகொண்ட இருவரும் சிரித்தபடி, கேட்க ஆரம்பித்தார்கள்.
“துடுக்கான ஹீரோ அவர். நிறைய காதல், நிறைய பிரச்சினை என்று வாழ்பவர். அவரோட படம் ஒண்ணு சொன்ன தேதியில ரீலீஸ் ஆகலை. ஏகப்பட்ட சிக்கல். இதுக்கு இன்னொரு ஹீரோதான் காரணம்னு கேரளாவுக்கு போய் மாந்திரீகம் செஞ்சாராம். அதாவது, அந்த போட்டி நடிகர் மேல பில்லி சூனியம் வச்சுட்டாராம்..”
நான் சொல்லி முடித்தவுடன், “அடப்பாவி, தொழில்ல அக்கறையா இருந்தா ஏன் பிரச்சினை வரப்போகுது.. இந்தக் காலத்திலேயும் இப்படி இருக்காங்களே…” என்று ஆதங்கத்தைக் கொட்டினார் அன்பு.
“சரி, நான் காலேஜ் மீட்டிங் போக நேரமாச்சு.. கிளம்பலாமா…” என்றேன்.
உடனே சுந்தர்ஜி, “சரி, நான் ஒரு ஹாட் நியூஸ் சொல்றேன்.. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவோட தம்பி ராமஜெயம் கொல்லப்படார் இல்லையா. கொலை செஞ்சவங்கள ஸ்மெல் பண்ண முடியாம போலீஸ் ரொம்பவே திண்டாடிடுச்சு. இப்ப ஒருவழியா, குற்றவாளியை நெருங்கிட்டாங்களாம். பிரபல வாரமிருமுறை புலனாய்வு பத்திரிகையில ஆசிரியருக்கு இணையான பொறுப்புல இருக்கிறவருதான் அந்த அக்கயூஸ்ட்டாம். . சிபிசிஐடி போலீசார் அழைச்சுகிட்டுப்போயி விசாரிச்சிருக்காங்க… இதனால ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கார் அந்த இணையானவர். ஆனாலும் ஆசிரியர் வாங்கலையாம். அம்புட்டு பாசம்… தம்பி மேல.. கூடிய சீக்கிரம் விவகாரம் வெளிச்சத்துக்கு வரும்!விரைவில் கைது செய்யபடுவார் என்று சொல்லுகின்றனர் ” என்றார்.
அதிர்ச்சியில் அப்படியே நின்றோம்… பிறகு சுதாரித்து கிளம்பினோம்….
ஓகே. நண்பர்களே.. அடுத்த வியாழன் மீண்டும் சந்திக்கலாம்… பை!