
ரயிலில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு புதுவசதி தென்னக ரயில்வே அறிவிப்பு
ரயிலில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கைகளை மாற்றிக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயிலில் பெண்கள் தனியாகப் பயணம் செய்யும்போது பல்வேறு சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக பல ஆண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பெண் பயணி மட்டும் தனியாக பயணம் செய்யவேண்டிய சூழலில் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற சூழலும் பல்வேறு அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. இதனைப் போக்குவதற்காக தென்னக ரயில்வே சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. இவ்வாறு சிரமங்களை எதிர்நோக்கும் பெண் பயணிகள் தென்னக ரயில்வேயின் சென்னை உதவி வர்த்தக மேலாளர் அமுதா அவர்களை 90031 60980 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பாதிப்புக்கு உள்ளாகும் பெண் பயணிகளின் குறைகளை கவனமாக களைவதுடன் அவர்களின் இருக்கை மற்றும் படுக்கையினை பாதுகாப்பான வேறு பெட்டிகளுக்கு மாற்றி அவர்களின் விரும்பத்தக்க சூழலில் பாதுகாப்பான பயணத்தை தொடர வழிசெய்யப்படும்.
கொடுக்கபப்டும் புகார் உண்மை என அறியப்பட்டால் ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும். புகார்தாரரின் பெயர் மற்றும் செல்போன் ஆகியவை புகாரில் குறிப்பிடவேண்டும். இதுதவிர பெண் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் 182 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel