யுனெஸ்கோ தலைமையகத்தில் ஆர்யபட்டாவின் வெண்கலச்சிலை: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி திறந்து வைத்தார்
பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பழம்பெரும் இந்திய கணிதமேதையும் வானியல் அறிஞருமான ஆர்யபட்டாவின் மார்பளவு வெண்கலச்சிலையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி திறந்து வைத்தார். இந்தச்சிலை இந்தியாவின் சார்பில் அங்கு நிறுவப்பட்டுள்ளது. யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற ‘பூஜ்யம் பற்றிய சர்வதேச மாநாட்டில்’ அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்து கொண்டார்.வரலாற்றில் போற்றத்தக்க கணிதத்தின் பெருமைகளை கொண்டாடும் வகையிலான சர்வதேச மாநாட்டினை யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியா இணைந்து நடத்தியது.
2015 ஆம் ஆண்டின் நவம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் யுனெஸ்கோ தலைமையகம், பாரிசில் நடைபெற்ற 38 ஆவது அமர்வின் ஒரு பகுதியான உயர் மட்ட பிரிவிலான தலைவர்கள் பங்கேற்ற, ‘கருத்துக்கள மாநாட்டில் அமைச்சர் ஸ்மிர்ருதி ராணியும் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் ஸ்மிருதி ராணி யுனெஸ்கோ இயக்குனர் ஐரினா போகாவாவுடன் கலந்துரையாடினார். அதில் யுனெஸ்கோ அமைப்புக்கான இந்தியாவின் முழு ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்ட்து.இச்சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாகச் சேர்ந்து அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதில் இந்தியாவின் கணித தினமாக கொண்டாடப்படும் கணிதமேதை ஸ்ரீநிவாச இராமானுஜன் பிறந்த டிசம்பர் 22 ஆம் நாளினை யுனெஸ்கோ தலைமையகத்தில் கொண்டாடுவது என்றும் அப்போது 2016 ஆம் ஆண்டில் பூஜ்யம் தொடர்பான பெரிய சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யபடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம் இணைந்து பாரிசில் நடத்திய இந்த மாநாட்டில் கணிதத்துறை தொடர்பான பல நிபுணர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.